JUL 31 MORNING

யோவான் 17:23

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

யோவான் 17:23

ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் அவர்களுக்குள்ளும்" (). நம்முடைய ஆத்துமாக்களுக்கும் நம் ஆண்டவருடைய ஆளுமைக்கும் இடையே நிலைத்திருக்கும் உடன்படிக்கை அத்தகையதாய் இருக்குமானால், நம்முடைய ஐக்கியத்தின் கால்வாய் எவ்வளவு ஆழமானதாகவும் அகலமானதாகவும் இருக்கிறது! இது ஒரு நூல் போன்ற நீரோடை தன் வழியைக் கண்டடையக் கூடிய குறுகிய குழாய் அல்ல, இது மகா ஆச்சரியமான ஆழமும் அகலமும் கொண்ட ஒரு கால்வாயாகும், இதனுடைய மகிமையான நீளத்தின் வழியாய் ஜீவனுள்ள தண்ணீரின் பாரமான நிறைவு தன் வெள்ளத்தைப் பாய்ச்ச முடியும். இதோ அவர் நமக்கு முன்பாக ஒரு திறந்த வாசலை வைத்திருக்கிறார், பிரவேசிக்க நாம் பராக்காய் இராதிருப்போமாக. இந்த ஐக்கியத்தின் நகரத்திற்கு அநேக முத்து வாசல்கள் உண்டு, ஒவ்வொரு வாசலும் ஒரே முத்தாய் இருக்கிறது, நாம் உள்ளே பிரவேசிக்கும்படிக்கு ஒவ்வொரு வாசலும் விளிம்பு வரை திறந்து வைக்கப்பட்டிருக்கிறது, நாம் வரவேற்கப்படுவது நிச்சயம். இயேசுவோடு பேசுவதற்கு ஒரே ஒரு சிறிய ஜன்னல் மாத்திரம் இருந்திருந்தால், அந்தப் பாழான வாசல் வழியாய் ஐக்கியத்தின் ஒரு வார்த்தையைப் பேசுவதே உன்னதமான சிலாக்கியமாய் இருந்திருக்கும்; எவ்வளவோ பெரிய பிரவேசத்தைப் பெற்றிருப்பதில் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! கர்த்தராகிய இயேசு நமக்கு மகா தூரத்தில், நடுவே அநேகக் கொந்தளிக்கும் கடல்களோடு இருந்திருந்தால், நம்முடைய அன்பை அவரிடம் கொண்டு செல்லவும், அவருடைய பிதாவின் அரமனையிலிருந்து நமக்குச் செய்திகளைக் கொண்டு வரவும் அவரிடம் ஒரு தூதனை அனுப்ப நாம் வாஞ்சித்திருப்போம்; ஆனால் அவருடைய கனிவைப் பாருங்கள், அவர் தன் அரமனையை நம்முடைய வீட்டிற்கு அடுத்தபடியாகக் கட்டியிருக்கிறார், அதுமட்டுமல்ல, அவர் நம்மோடு தங்கி, ஏழையான தாழ்மையான இருதயங்களில் வாசம்பண்ணுகிறார், இவ்விதமாய் அவர் நம்மோடு மாறாத ஐக்கியத்தைக் கொண்டிருக்கிறார். நாம் அவரோடு மாறாத ஐக்கியத்தில் வாழாமல் போனால் நாம் எவ்வளவு புத்தியற்றவர்களாய் இருக்க வேண்டும். பாதை நீண்டதாகவும், ஆபத்தானதாகவும், கஷ்டமானதாகவும் இருக்கும்போது, சிநேகிதர்கள் ஒருவரையொருவர் சந்திப்பது அரிது என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் அவர்கள் ஒன்றாக வாழும்போது, யோனத்தான் தன் தாவீதை மறந்துவிடுவானா? (1 சாமுவேல் 18). தன் கணவன் பிரயாணமாயிருக்கும் போது ஒரு மனைவி அவரோடு பேசாமல் அநேக நாட்கள் இருக்கலாம், ஆனால் அவர் தன் சொந்த அரமனையின் அறைகளில் ஒன்றில் இருக்கிறார் என்று அறிந்தால் அவளால் அவரை விட்டுப் பிரிந்திருக்கவே முடியாது. என்ன, விசுவாசியே, நீ அவருடைய திராட்சரச விருந்தில் ஏன் உட்காரக் கூடாது? உன்னுடைய கர்த்தரைத் தேடு, ஏனெனில் அவர் அருகில் இருக்கிறார்; அவரைக் கட்டித் தழுவிக்கொள், ஏனெனில் அவர் உன்னுடைய சகோதரர். அவரை இறுகப் பற்றிக்கொள், ஏனெனில் அவர் உன்னுடைய மணவாளன்; அவரை உன்னுடைய இருதயத்தோடு சேர்த்துக் அணைத்துக்கொள், ஏனெனில் அவர் உன்னுடைய சொந்த மாம்சமாய் இருக்கிறார்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.